தெய்வம் வளர்த்ததமிழ் தென்பொதிகை தோன்றுதமிழ்
உய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் - மெய்யுணர்வில்
தன்னே ரிலாததமிழ் துங்கமுடன் மின்னிணையம்
மின்னவந்த மேன்மைத் தமிழ்.

 * தமிழ் திருமுறை திருமணத்தின் தனிச்சிறப்புகள் * ----------* The Special features of Tamil Thirumurai Thirumanam*


வள்ளிமலை படிவிழாவில் பாம்பன் சுவாமிகள்

Big Image

ஏறத்தாழ ஓராண்டிற்கு முன் சன் தொலைக்காட்சியில் செய்திப் பகுதியில் ஒரு காட்சி காட்டப்பட்டு அது மிகப் பரபரப்பாகப் பேசப்பட்டது, வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அதாவது திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து கொண்டிருந்த அன்பர் ஒருவர்க்கு அரிய காட்சி ஒன்று தென்பட்டது. அவர் கிரிவலம் சென்ற நேரம் அதிகக் கூட்டம் இல்லாத நேரம். அந்தக் காட்சியைக் கண்டு அவர் அதிர்ந்து போனார். தவ முனிவர் கோலத்தில் யாரோ ஒரு பெரியவர் மலையோரமாக பூமியை விட்டு நாலடி உயரத்தில் மிதந்து கொண்டு போய்க் கொண்டிருந்தார்.

நல்ல வேளை! அந்த அன்பருக்கு திடீரென ஓர் எண்ணம் உதிக்க அவர் சுறுசுறுப்பானார். கையில் புகைப்படம் எடுக்கும் வசதியுடன் கூடிய செல்பேசி அவர் கையில் இருந்தது. அதில் ‘மூவி’ படம் எடுக்கும் வசதியும் இருந்தது. உடனே சுறுசுறுப்பாய் அந்தக் காட்சியைப் படம் பிடித்தார். அந்தத் தவமுனிவர் இன்னும் மெல்லத் தான் மிதந்து கொண்டிருந்தார். திடீரென இவர் புகைப்படம் எடுப்பதை அந்தத் தவமுனிவர் பார்த்துவிட்டார் போலும். சரேலென சாய்வாக ஒரு ராக்கெட் சீறிப் பாய்வது போல் விண்ணில் பாய்ந்து அந்தத் தவமுனிவர் காட்சியில் இருந்து மறைந்து போனார்.

இந்த அரிய காட்சியைத் தான் சன் தொலைக்காட்சி செய்தியில் காட்டியது. அந்த உருவத்தைப் பார்த்தால் தவ முனிவர் கோலம் போல் தெரிந்தாலும், அது மெலிந்த தேகத்துடன் சொல்லொணாத நிறத்துடன் சடைக் கற்றைகள் இடுப்பு வரை தொங்கிக் கொண்டிருக்கப் பறந்தது.

மேலை நாடுகளில் குறிப்பாக கனடாவில் அடிக்கடி வேளாண் நிலத்தில் உழவர்கள் பணி செய்து கொண்டிருக்கையில் பறக்கும் தட்டுகள் (Unidentified Flying Objects) பறந்து சென்றதாக அடிக்கடி செய்தித் துணுக்குகள் வெளிவருவது உண்டு. அதை ஆராயும் மேலை நாட்டவர்கள் குழுக்குழுவாக ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். இன்னும் இது பற்றி தெளிவான ஒரு முடிவுக்கு வந்து அதை அறிவிக்கவில்லை.

ஆனால் இதைத் தூக்கி சாப்பிடுவது போல இந்த மிதக்கும் முனிவர், விண்வெளிக் கலம் போல் பறக்கும் முனிவர் திருவண்ணாமலையில் கண்டிருப்பதற்கான ஆதாரம் மிக்க செய்தி வந்திருக்கிறது. ஆனால் இதைத் தொடர்ந்து நம் தமிழ்நாட்டில் எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. நம்மைப் பொறுத்த வரை இது, ‘தெரியுமா சேதி’ என்ற பட்டியலில் ஒன்று. கேட்டுவிட்டு சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் இதை விடப் பெரிய அதிசயமாக நமது அன்றாட வாழ்க்கையில் நாம் மூழ்கி விடுகிறோம்.

நான் இந்தச் செய்தியைக் கண்டவுடன் சன் தொலைக்காட்சியில் எனக்குத் தெரிந்த சிலரிடம் மேற்கூறிய காட்சியை செல்பேசியில் ‘பிடித்து வைத்த’ அன்பரைப் பற்றி அறிந்து கொள்ள உசாவினேன். (உசாவுதல் என்ற தமிழ்ச் சொல் தான் விசாரணை என்று வடமொழி ஆயிற்று.) இது வரை எந்தத் தகவலும் கிடைக்க வில்லை.

ஒரு வேளை, ‘இப்படி நீ ஏன் அலைகிறாய்! உனக்கே அப்படி ஒரு காட்சி கிடைக்கும்; அஞ்சேல்!’ என்று இறைவன் நினைத்தானோ என்னவோ! அப்படி ஒரு அற்புதமான காட்சி அண்மையில் வள்ளிமலையில் கிடைத்திருக்கிறது!

ஆமாம், சென்ற 12-1-2009-ஆம் நாள் வள்ளிமலையில் 61-ஆம் ஆண்டு படி விழா நடைபெற்றது. அதை ஆண்டு தோறும் ஏற்பாடு செய்கின்ற ‘வேலூர் ஸ்ரீவள்ளிமணாளர் திருப்புகழ் பாராயண சங்கம்’ என்கிற அமைப்பின் செயலாளராகப் பங்கு பணி ஆற்றி வருகிறேன். இந்த அமைப்பு எனது தந்தையார் வேலூர் அன்பன் மு.பெருமாள் என்னும் திருப்புகழ் சிவம் அவர்களின் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்டு அது முதல் மூன்றாம் ஆண்டில் இருந்து 64-வது நாயனார் என்று உலகே போற்றும் வாரியார் சுவாமிகளின் தலைமையில் சுவாமிகள் வானொடு வானாகக் கலக்கும் வரை தொடர்ந்து நடைபெற்று வர பெரியோர்களின் அடியொற்றி வேலூர் வள்ளல் திரு. A.S.A.பரமசிவம் அவர்கள் தலைமையில் ஆற்றொழுக்காக படிவிழா ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இவ்விழாவிற்குப் பல ஆண்டுகளாகப் பேராதரவு தந்து வரும் வேலூர் அ/மி ஜலகண்டேசுவரர் தருமஸ்தானம் இம்முறை நேரடியாகப் பங்கு பணி ஆற்றியது இவ்வருடச் சிறப்பு.

இந்தப் பின்னணியில் குறிப்பிட வேண்டியது ஒன்று உண்டு. 60 ஆண்டுகளாக தமிழ் வருடப் பிறப்பாகப் கருதப் பட்டு வந்த சித்திரைக்கு முன்னாள் அதாவது பங்குனி இறுதி நாளில் படிவிழா நடைபெற முருகன் அருள் பெற்று புத்தாண்டைத் தொடங்குவதாக விழா நடைபெற்று வந்தது. ஆனால் தைம்முதலே தமிழ்ப்புத்தாண்டு என்று எழுந்துள்ள கருத்தை ஒட்டி இம்முறை தைப்பொங்கல் முன்னாளான 12-1-2009 அன்று படிவிழா நடைபெற்றது.

அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது! ஆனால் நடந்த அந்த அதிசயம் அப்போது எனக்குத் தெரியவில்லை.

ஒரு நாள் என்னுடைய மாமா திரு. ஜி.சிவானந்தம் அவர்கள் இந்த ஆண்டு வள்ளிமலை படிவிழாவை என்னுடைய செல்பேசியில் எடுத்த ஒளிப்படக் காட்சியை CD செய்துள்ளேன் செய்துள்ளேன்! என்று எனது இல்லத்தில் வந்த போது அந்த குறுந்தகட்டைக் கொடுத்தார். அவர் ஒரு தீவிர திருமுறை அன்பர்; திருத்தணி முருக அன்பர்.

அவர் முன்னிலையிலேயே அந்த குறுந்தகட்டைப் போட்டுக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். படிவிழாவில் அன்பர்கள் பாராயணம் செய்து மலைவலம் வந்து கொண்டிருந்த காட்சிகள் வந்து கொண்டிருந்தன. திடீரென மலைமேல் கண்ட ஒரு காட்சி என்னைத் திடுக்கிடச் செய்தது. ‘நிறுத்து! நிறுத்து!!’ என்று என்னையறியாமல் கத்தினேன். உடனே என்ன, என்ன என்று எனது சகோதரியார் திருமதி சத்தியகுமாரி கேட்டார். ‘மலைமேல் ஒரு உருவம் தெரிந்தது. அது பாம்பன் சுவாமிகளைப் போல இருந்தது’ என்றேன். குறிப்பிட்ட அந்தப் பகுதியை இடைநிறுத்தம் (Pause) செய்து பார்த்தால்.... ஆ! என்ன அதிசயம்! அங்கே பாம்பன் சுவாமிகளின் திருக்கோலம் மங்கலாகத் தெரிந்தது. அவரது வழக்கமான அமர்ந்த நிலைப் புகைப்படங்களில் எப்படிக் காட்சி அளிப்பாரோ அப்படியே அச்சில்! பார்த்த எங்கள் அனைவருக்கும் மெய்சிலிர்த்தது.

இதை எடுக்க வேண்டும் என்று எண்ணிப்பார்த்து எடுத்த படக்காட்சி அல்ல அது! படம் எடுத்துத் தான் வீட்டில் போட்டுப் பார்த்தபோது கூட கவனித்திராத ஒன்றை நான் காட்டியபோது கண்டு விக்கித்து நின்றார் எனது மாமா!

அப்படியானால்......? படிவிழாவின் போது பத்தர்கள் பாராயணம் செய்து வரும் போது அந்தப் பாராயணத்தை உற்றுக் கேட்கவும் பார்க்கவும், அதில் கலந்து கொள்ளவும் தூரத்தில் மலைமேல் அமர்ந்து நோக்கி இருக்கிறார் பாம்பன் சுவாமிகள்! நினைத்தாலே புல்லரிக்கிறது!

இப்படிப் பல படி விழாக்களில் கருக்கல் இருட்டில் பாராயணம் செய்து கொண்டு போகும் போது பல முறை மலை மீது சில உருவங்கள் எனக்குத் தெரிவதுண்டு. அருகில் உள்ளவர்க்கு எடுத்துக் கூறிக் காட்ட இயலும் போது அவை மறைந்து விடும். சொன்னால் எங்கே என்னைக் கேலி செய்வார்களோ என்று அஞ்சி நானும் பேசாமல் இருந்துவிடுவேன். ஆனால் இந்த முறை வந்தது பாம்பன் சுவாமிகளே! அதிலும் எதிர்பாராமல் ஏதோ காட்சியைப் படம் பிடிக்கும் போது அதில் பாம்பன் சுவாமிகளே அகப்பட்டு விட்டார் தெய்வச் செயலாக! அதுவும் படம் எடுத்தவருக்கே தெரியாமல்.

‘என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே’ என்று என் மனம் விதிர் விதிர்த்தது.

இத்தனைக்கும், இந்த முறை சித்திரைக்குப் பதிலாக தைம் மாத தமிழ்ப்புத்தாண்டினைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட படிவிழா! அதை அங்கீகரிப்பது போல் சுவாமிகள் மலைமேல் அமர்ந்து படிவிழாவை ஆசீர்வதிப்பது எத்தனை பெரிய புண்ணியச் செயல்!

மேற்கண்ட சுவாமிகள் உருவம் கொண்ட படம் ஒளிப் பின்னணியில் தொலைக்காட்சிப் பெட்டியில் தெரியும் போது துலக்கமாகத் தெரிகிறது. படம் எடுத்தால் புகைப்படக் காகிதத்தில் சற்று மங்கலாகத் தான் தெரிகிறது. ஆனாலும், வாசகர்கள் காண அந்தப் படத்தை அப்படியே இங்கே வெளியிடுகிறோம். உடன் அவரது ஆசீர்வாதம் பெற்ற நிலையில் அவரது வழக்கமான அவரது உயிர்க் காலத்தில் எடுத்த படத்தையும் அட்டைப் படத்தில் வெளியிடுவதில் ஆராப் பெருமை அடைகிறோம். இரண்டையும் ஒப்பிட்டுக் கூர்ந்து நோக்குவார்க்கு மலைமேல் அமர்ந்த பாம்பன் சுவாமிகள் உருவம் நன்கு புலனாகும்.

ஆக, திருவண்ணாமலையில் ஓர் அன்பர்க்கு ஏதோ ஒரு தவமுனிவர் காட்சி அளித்தது போல வள்ளிமலை படிவிழாவில் பாம்பன் சுவாமிகள் சூக்கும அச்சுடலுடன் வந்து கலந்து கொண்டிருந்திருக்கிறார். என்னே அப்படிவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் பேறு! அவரது பாடல் வரிகள் தான் நமக்கு இப்போது நினைவில் எழுகிறது. முருகனை அவர் வேண்டும் அந்த வரி இதோ,

“ எனைத் தள்ளினாலும் எனை
நம்பினவரைத் தள்ளேல்!”

Press Release...

 

நிகழ்வுகள்

 

Image

 

வள்ளிமலை படிவிழாவில் பாம்பன் சுவாமிகள்

 

மேலும் அறிய...

 

DRAVIDIAN RELIGIONS AND SOCIAL HARMONY

 

மேலும் அறிய...

Image 18-ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா

மூன்று நாள் விழா! 2-1-2009, வெள்ளி முதல் 4-1-2009, ஞாயிறு வரை

சைவசித்தாந்தச் செந்நெறி விளக்கும் ஆறாம் தந்திரம் முற்றோதல்.

மேலும் அறிய...

Image 18th year - Thirumanthiram Recital (3rd Round)

A Three Day Program :: 2nd - 4th Jan 2009

Full Recitation of 6th Thanthiram - in Nine sittings.

To Know More...

Image

தமிழறிஞர்கள் யாவரும் கொண்ட முடிவை ஏற்று தமிழக முதலமைச்சர் அறிவித்த வேகத்தில் இடையீடு விழாமல் அரசாணைக்கு ஏற்பாடு செய்தமைக்கு எட்டு கோடி தமிழர்களும் அவரை விட்டுக் கொடுக்காமல் திசை நோக்கி வணங்குவதே கடன்!

மேலும் அறிய...

 

Image18 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா ஒளிக்காட்சிகள்.

முதல் நாள்

இரண்டாம் நாள்

மூன்றாம் நாள்

 

படைப்புகள்

Imageகுற்றக்கழுவாய் (பிரதோஷ) வழிபாடு:
இறைவனை மறவாது வழிபட வேண்டும் என்பது பொது நியதி. எந்த வழிபாடானாலும் அது அறிவோடு ஆற்றப்பட வேண்டும். சிறப்புமிக்க பிரதோஷ வழிபாட்டை ஏன் செய்ய வேண்டும் ? எப்படி செய்ய வேண்டும் ? அப்படிச் செய்வதன் பொருள் என்ன? என்பதையெல்லாம் இந்நூலில் "உள்ளுறை" என்ற பகுதியிலும் "சிறப்பு" என்ற தலைப்பில் அதன் வழிபாட்டு முறைகளும் கூறப்பட்டுயுள்ளது.

மேலும் அறிய...

Imageவண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் :

நமது நாட்டில் குழந்தையைத் "தொட்டில் இடுதல்" ஆகிய தொடக்கம் முதல் "திருவடிப்பேறு" ஆகிய அடக்கம் வரை எத்தனையோ சடங்குகள் உள்ளன.

சடங்கு என்றால் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளை ஓர் ஓழுங்குமுறைக்குள் கொண்டு வர தமிழ்ச் சான்றோர்களால் யாக்கப்பட்ட முறையாகும். அவை மதிப்பு பெறுவது அவரவர் தாய் மொழியில் அவை ஆற்றப்படும்போது என்பது தெளிவு. ஆகவே தமிழர்கள் தமிழ் மொழிலேயே வாழ்வியல் சடங்குகளை ஆற்றுவதே இன்றைய தேவை. அந்தத் தேவையை நிறைவு செய்ய எழுந்ததே இந்நூல்.

மேலும் அறிய...

Imageதிருமுருகாற்றுப் படை:
திருமுருகாற்றுப்படை ஒரு தீவிர பத்தனை முருகப்பெருமானிடம் ஆற்றுப்படுத்துவது. திருமுருகாற்றுப் படைக்குச் சான்றோர் சிலர் உரை கண்டிருக்கின்றனர். ஆனால் இந்நூலாசிரியர் தமிழ்ச்சதுரர் மு.பெ. சத்தியவேல் முருகனார் நன்னூலுக்குச் சிவஞான முனிவர் விருத்தியுரை கண்டது போல் ஒரு விருத்தியுரை கண்டிருக்கிறார்.

மேலும் அறிய...