உய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் - மெய்யுணர்வில்
தன்னே ரிலாததமிழ் துங்கமுடன் மின்னிணையம்
மின்னவந்த மேன்மைத் தமிழ்.
பழுதை நீக்க வந்த பழந்தை
இது பற்றி ஆரிய பரத்துவாஜ கோத்திரத்தைச் சேர்ந்த நச்சினார்க்கினியர்
கூறுவது:
கால உரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்க ஓரை முதலாகத் தண்மதிக்கு உரிய
கற்கடக ஓரை ஈறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாம் ஆதலின் இதை எங்கே குறிப்பிடுகிறார்?
காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்
என்று தொல்காப்பிய நூற்பாவிற்கு உரை எழுதியவர் தான் மேற்கூறியவாறு ஓர் ஆண்டுக்
கணக்கு இது என்று காட்டினார். சிம்ம ஓரைக்கு உரிய மாதம் ஆவணி. கடக ஓரைக்கு
உரிய மாதம் ஆடி. ஆக முன்னாளில் ஆவணி மாதத்தில் ஆண்டு தொடங்கி ஆடி மாதத்தில்
முடிந்திருக்கிறது என்பது நச்சினார்க்கினியரின் உரையின் மூலம் அறிய முடிகிறது.
அதாவது சித்திரையில் இருந்து தமிழ்ப் புத்தாண்டு தொடங்கவில்லை என்பதற்கு
இந்த உரையே ஆணித்தரமான சான்று.
சக ஆண்டை நுழைத்தவர்கள் இதை மாற்றினார்கள். சூரியனது ஆட்சி வீட்டிற்கு உரிய
சிம்ம ராசிக்குப் பதிலாக சூரியன் உச்சம் பெறும் இராசியான மேஷராசிக்கு மாற்றி
அதற்கு உரிய மாதமான சித்திரை மாதத்திலிருந்து ஆண்டுத் தொடக்கத்தை அமைத்து
எல்லா மாதங்களுக்கும் அதையொட்டி 60 ஆண்டுகளுக்கும் வடமொழிப் பெயர் வைத்துத்
தமிழ் நாட்டில் உலாவ விட்டார்கள். அரசனது ஆதரவு பெற்று கல்வெட்டுக்களில்
அவர்கள் தொடர்ந்து இந்த மாதப் பெயர்களையும் ஆண்டுப் பெயர்களையும் புகுத்தி
நடைமுறைப் படுத்தியதால் அதுவே நிலை பெறலாயிற்று. இது தான் சித்திரை முதல்
நாள் தமிழ்ப்புத்தாண்டு ஆன கதை.
இதை உணர்ந்து தான் ஏற்கெனவே தெய்வமுரசு இந்த ஆண்டு, மாதம், தேதி ஆகியவற்றின்
பெயர்களை மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் காட்டிய நெறி முறையின் அடிப்படையில்
தமிழ்ப் பெயர்களாக மாற்றிப் பட்டியலிட்டுக் காட்டியது வாசகர்களுக்கு நினைவிருக்கும்.
அவை தற்போது இணைய தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு ஏற்றுக் கொண்டு வரப்படுகின்றன.
இப்போது எழும் கேள்வி என்ன என்றால் ஆவணி மாதத்தில் இருந்து அயலவர்கள் தமிழகத்தில்
நுழைந்து சித்திரைக்கு மாற்றி இது தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற தமிழர்களின்
மீது திணிப்பது எப்படி நியாயமாகும்? அதே போல் அந்தக் கணக்கைத் தமிழர்கள்
சிந்தித்துத் தமக்கு ஏற்றப்படி மாற்றி அமைத்துக் கொள்வது எப்படி அநியாயம்
ஆகும்? ஆகவே மாற்றம் அவசியம் வேண்டும். இனி இதை எப்படி அமைப்பது?
போற்றுதலுக்கு உரிய மறைமலை அடிகள் தலைமையில் ஏறத்தாழ 88 ஆண்டுகட்கு முன்
சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் தமிழ்ப் பேரறிஞர்கள் இந்தப் பொருளைக்
கையில் எடுத்துக் கொண்டு ஆராய்ந்தார்கள். அவர்கள் எடுத்த முக்கிய தீர்மானங்கள்
இரண்டு. இனி தமிழர்கள் மட்டுமன்றி உலகமே பொதுமறை என்று போற்ற ஒரு நூலை அளித்த
திருவள்ளுவர் பிறந்த ஆண்டிலிருந்து ஆண்டுக் கணக்கை எடுத்து திருவள்ளுவர்
ஆண்டு என்று கணக்கிடுவது. அது தற்போது வழங்கி வரும் ஆங்கில ஆண்டுக்கு 31
ஆண்டு முற்பட்டது. எனவே ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகளைக் கூட்டினால் திருவள்ளுவர்
ஆண்டு வந்துவிடும்.
இரண்டாவதாக ஆண்டுத் தொடக்கத்தைத் தை முதல் நாளிலிருந்து கணக்கிடுவது.
இதில் முதலாவது ஏற்கெனவே தமிழக அரசின் நாட்காட்டிகளில் நடைமுறைக்கு வந்து
விட்டது. அடுத்து அதை ஒட்டிய தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு எனக் கடைப்பிடிப்பது.
இதோ, இன்னும் சில நாளில் அரசு முத்திரை அதற்குக் கிடைத்துவிடும் என்பது இனிப்பான
செய்தி.
அடுத்து இன்னொரு கேள்வி. ஏன் நச்சினார்க்கினியர் தான் ஆவணியைச் சொல்லி இருக்கிறாரே.
மாற்றுவது தான் மாற்றுகிறீர்களே ஆவணி மாதத்திற்கே போவது தானே! இப்போது ஏப்ரல்
மாதத்தில் கிடைக்கும் ஒரே நாள் விடுமுறைக்கும் வேட்டு வைக்கிறீர்களே! இப்படி
ஒரு கேள்வி எங்கோ ஒரு அரசு அலுவலக மூலையில் இருந்து கேட்கிறது.
விடுமுறையை விடுங்கள். பழைய ஆவணி மாதம் பற்றிய கேள்வி கவனிக்கப்பட வேண்டியதே!
தமிழன் வாழ்வில் உழவுக்கே முதலிடம். அதனால் தான் வள்ளுவர் ஏர்ப் பின்னது
உலகம் என்றார். உழவன் ஆண்டு முழுவதும் உழைத்து இயற்கையோடு இயைந்து பருவத்தே
பயிர் செய்து முடிவில் பலன் காண்கின்ற மாதம் தைமாதம். தை பிறந்தால் வழி பிறக்கும்
என்று காத்துக் கிடப்பவன் தமிழன். ஆவணி பிறந்தால் வழி பிறக்கும் என்று யாரும்
சொல்லுவதில்லை. அந்த மாதத்திற்குச் சற்று முன் ஆடிப்பட்டம் தேடி விதைத்து
அடுத்த மாதம் அறுவடை செய்ய முடியுமா? இயற்கை அப்படி இல்லையே. எனவே எந்த மாதத்தில்
தமிழனுடைய வாழ்வில் வழி பிறக்கின்றதோ அந்த மாதத்தில் ஆண்டு பிறக்கட்டுமே!
அப்போது தானே ஆண்டு முழுவதும் அவனக்கு நல்ல படியாக நடந்தேறும். இதையெல்லாம்
சிந்தித்துத் தான் தமிழறிஞர்கள் தை மாதத்தை ஆண்டின் முதல் மாதமாகத் தேர்ந்தெடுத்தார்கள்.
மேலும் இந்த மாதத்தில் தான் இயற்கை கூட இனிமையான கரும்பைக் கொடுக்கிறது.
தமிழன் இயற்கையான இனிமையையே தேர்ந்தெடுப்பவன்.
சங்க நூல்களும் தை மாதத்தையே புகழ்ந்து போற்றுகின்றன. தாயருகா நின்று தவத்தை
நீராடுதல் என்கிறது பரிபாடல் பதினொன்றாம் பாட்டு. தையில் நீராடிய தவம்தலைப்
படுவாயோ என்று தையைப் போற்றுகிறது கலித்தொகையின் 59-ஆவது பாடல். நறுவீ ஐம்பால்
மகளிராடும் தைஇத் தண்கயம் என்று பாடுகிறது ஐங்குறுநூற்றின் 84-ஆம் பாடல்.
எனவே தை தவ ஆற்றல் மிக்கது என்பது சங்க நூற்கள் கருத்து. அதனால் வள்ளலார்
தமிழர்க்கு ஏற்ற மாதம் என்பதோடு தவ ஆற்றலுக்கு ஏற்றது என்பதால் தைம் மாதத்தைத்
தேர்ந்தெடுத்து தைப்பூசத்தில் அருட்சோதி தரிசனம் காட்டினார். தைப்பூசம் காணாதே
போதியோ பூம்பாவாய் என்று சம்பந்தரும் தைப்பூசத்தைப் போற்றிப் பாடுகிறார்.
ஆக உலகியலாலும் அருளியலாலும் இருவகையாலும் மிகச் சிறந்த மாதம் தை. இதுவே
ஆண்டின் முதல் மாதமாகக் கொள்வதற்கு எல்லாத் தகுதியும் உடையது.
தமிழறிஞர்கள் யாவரும் கொண்ட முடிவை ஏற்று தமிழக
முதலமைச்சர் அறிவித்த வேகத்தில் இடையீடு விழாமல் அரசாணைக்கு
ஏற்பாடு செய்தமைக்கு எட்டு கோடி தமிழர்களும் அவரை விட்டுக் கொடுக்காமல் திசை
நோக்கி வணங்குவதே கடன்!
அப்தம் என்ற வடமொழிச் சொல்லுக்கு முடிவு என்று பொருள். சஷ்டி அப்தம் என்றால்
அறுபது நிறைந்தது என்று பொருள். இனி சகம் அப்தமாவதால் சகாப்தத்திற்கு இது
சகாப்தம். தொடங்கட்டும் புதிய தமிழ் வரலாறு! பழுதை
நீக்கி வந்த பழந்தையே வருக!
நிகழ்வுகள்

18-ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா
மூன்று நாள் விழா! 2-1-2009, வெள்ளி முதல் 4-1-2009, ஞாயிறு வரை
சைவசித்தாந்தச் செந்நெறி விளக்கும் ஆறாம் தந்திரம் முற்றோதல்.

18th year - Thirumanthiram Recital (3rd Round)
A Three Day Program :: 2nd - 4th Jan 2009
Full Recitation of 6th Thanthiram - in Nine sittings.

தமிழறிஞர்கள் யாவரும் கொண்ட முடிவை ஏற்று தமிழக முதலமைச்சர் அறிவித்த வேகத்தில் இடையீடு விழாமல் அரசாணைக்கு ஏற்பாடு செய்தமைக்கு எட்டு கோடி தமிழர்களும் அவரை விட்டுக் கொடுக்காமல் திசை நோக்கி வணங்குவதே கடன்!
படைப்புகள்
குற்றக்கழுவாய்
(பிரதோஷ) வழிபாடு:
இறைவனை மறவாது வழிபட வேண்டும் என்பது பொது நியதி. எந்த வழிபாடானாலும்
அது அறிவோடு ஆற்றப்பட வேண்டும். சிறப்புமிக்க பிரதோஷ
வழிபாட்டை ஏன் செய்ய வேண்டும் ? எப்படி செய்ய வேண்டும் ? அப்படிச் செய்வதன்
பொருள் என்ன? என்பதையெல்லாம் இந்நூலில் "உள்ளுறை" என்ற பகுதியிலும்
"சிறப்பு" என்ற தலைப்பில் அதன் வழிபாட்டு முறைகளும் கூறப்பட்டுயுள்ளது.
வண்டமிழில்
வாழ்வியல் சடங்குகள் :
நமது நாட்டில் குழந்தையைத் "தொட்டில் இடுதல்" ஆகிய தொடக்கம் முதல் "திருவடிப்பேறு" ஆகிய அடக்கம் வரை எத்தனையோ சடங்குகள் உள்ளன.
சடங்கு என்றால் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளை ஓர் ஓழுங்குமுறைக்குள் கொண்டு வர தமிழ்ச் சான்றோர்களால் யாக்கப்பட்ட முறையாகும். அவை மதிப்பு பெறுவது அவரவர் தாய் மொழியில் அவை ஆற்றப்படும்போது என்பது தெளிவு. ஆகவே தமிழர்கள் தமிழ் மொழிலேயே வாழ்வியல் சடங்குகளை ஆற்றுவதே இன்றைய தேவை. அந்தத் தேவையை நிறைவு செய்ய எழுந்ததே இந்நூல்.
திருமுருகாற்றுப்
படை:
திருமுருகாற்றுப்படை ஒரு தீவிர பத்தனை முருகப்பெருமானிடம்
ஆற்றுப்படுத்துவது. திருமுருகாற்றுப் படைக்குச் சான்றோர் சிலர் உரை கண்டிருக்கின்றனர்.
ஆனால் இந்நூலாசிரியர் தமிழ்ச்சதுரர் மு.பெ. சத்தியவேல் முருகனார் நன்னூலுக்குச்
சிவஞான முனிவர் விருத்தியுரை கண்டது போல் ஒரு விருத்தியுரை கண்டிருக்கிறார்.


